About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

May 21, 2012


              யர்ந்த இலக்கை நோக்கி உந்திச் செல்வதே வாழ்க்கை. ஒவ்வொரு நொடியையும் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ளும் உன்னதப் பயணமாக அது மலர வேண்டும். கல்வியும், அறிவும் அதை உறுதிப்படுத்தும் சாதனங்கள் மட்டுமே. படிக்காமலேயே அந்த நிலையை அடைய முடியுமென்றால் கல்லூரியைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. பல்கலைக் கழகங்களைப் பற்றியும் அக்கறை கொள்ள அவசியமில்லை.

வெறும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே மேல்படிப்பு என இன்று பல இளைஞர்களின் இதயத்தில் எழுத சமூகம் தீவிரமாக முயற்சி செய்கிறது. எப்படியேனும் ஒரு வீடு, வாகனம், ஊசலாடல் இல்லாத உத்தியோகம் ஆகியவை மட்டுமே இலக்குகள் என்று உரக்கச் சொல்லி அவர்களை மனோ வசியப்படுத்திப் பார்க்கும்படி  அனைத்து சக்திகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மயிரிழையில்கூட அந்த "இலட்சிய வெறி'யை இழந்து விடக்கூடாது என எல்லாப் பாறைகளிலும் முட்டி மோதும் மனத்தயாரிப்பை வெகு மக்கள் சாதனங்களும், கல்வி நிறுவனங் களும் செய்துவருகின்றன.

மருத்துவம், பொறியியல் போன்ற "நட்சத்திரத்' துறைகளில் நுழைய முடியா விட்டால் "வாழ்வே வீண்' என்ற மாயையில் சிக்கி விரக்தியின் விளிம்பைத் தொடும் இளைஞர்கள் சிலர் இருக்கிறார்கள். பிடிக்கா விட்டாலும் இத்துறைகளுக்குக் கழுத்தைப் பிடித்துத் தள்ளப்படுகின்ற மாணவர்களும் இருக்கிறார்கள். தனக்குப் பிடிக்காத படிப்பை எடுத்துவிட்டு வாழ்நாள் முழுவதும் வருத்தத்தை மட்டுமே வர வைக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். "எது தனக்குப் பிடிக்கும்' என்பதே தெரியாமல் குழப்பிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். படிக்கிற படிப்பை மாற்றி மாற்றிப் படித்து எங்கேயும் நீடிக்காமல் போகிறவர்களும் உண்டு. பெரிதாகக் கற்பனை செய்து ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து ஏமாந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.

மலைகளும், மரங்களும், நதிகளும், கடலும் சேர்ந்து இருப்பதால் மட்டுமே உலகம் அழகாக இருக்கிறது.  பயன் பொருள்களில் இல்லை; மனித மனத்தில்தான் இருக்கிறது.

சிற்பங்களும், ஓங்கி உயர்ந்த தாவரங் களும், சுழித்து ஓடும் ஓடைகளும், அழகான ஓவியங்களும், நேர்த்தியாக நெசவு செய்த உடைகளுமற்ற உலகம் வெறும் கருப்பு- வெள்ளை உலகமாகவே காட்சியளிக்கும்.

நமக்கு விஞ்ஞானிகளும் வேண்டும்; மெய்ஞ் ஞானிகளும் வேண்டும்; வானவிய லாரும் வேண்டும்; மீனவ மக்களும் வேண்டும்; கழனியறிவும் வேண்டும்; கணினி யியலும் வேண்டும்; சிற்பக் கலைஞர்களும் வேண்டும்; தர்க்கவியலும் வேண்டும்; ஓவியர் களும் வேண்டும்; தாவர அறிஞர்களும் வேண்டும். செம்மையான செருப்புத் தொழி லாளி, அரைகுறை அதிகாரியைவிட மேலானவன். நேர்மையாகக் கல்லுடைப்பவர், கறைபடிந்த தொழிலதிபரினும் உன்னதமானவர்.

செய்கிற பணியைவிட, செய்யப்படுகிற நேர்த்தியும், நேர்மையும் முக்கியமானவை. இந்த அடிப்படை உண்மை விளங்கி விட்டால், ஏமாற்றங்களும் விரக்தியும் நம்மிடம் நெருங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது.

மேற்படிப்பு என்பது நம்முடைய விருப்பத்தையும், ஆர்வத்தையும் பொறுத்து அமைய வேண்டும். அதற்கு முதலில் நம்மை சுய பரிட்சார்த்தம் செய்து கொள்ளல் தேவை. எதற்காகப் படிக்கிறோம் என்பது தெரியாமலேயே நாம் படிக்கத் தொடங்கு கிறோம். என்ன செய்யப் போகிறோம் என்பது புரியாமலேயே நாம் பணியில் சேர்கிறோம். என்ன பணியாற்றினோம் என்பதை உணராமலேயே ஓய்வு பெற்று விடுகிறோம் - காரணம்; விழிப்புணர்வின்மை.

நம் விருப்பமும், சமூகத்தின் தேவையும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் போது, நம்முடைய பணி சிகரத்தையடைந்து விடுகிறது. ஆசிரியப் பணி என்பதை பலரை உரு வாக்கும் பணியாக உருவகப்படுத்த வேண்டும். கட்டடக் கலையை பூமிக்குப் புதுபொலிவைச் சேர்க்கும் சேவை யாகக் கருதவேண்டும். வேளாண்மையை மண்ணுக்கு அணிவிக்கும் மரகதக் கணை யாழியாகக் கருத வேண்டும். விஞ்ஞானத்தைத் தேடலாகக் கருதி ஒவ்வொரு நொடியையும் உற்சாகமாக்க வேண்டும். நமக்கான பணியை நாம்தான் தேர்ந் தெடுக்கவேண்டும். எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் அறிவுரை கேட்கலாம். ஆனால் முடிவு நம்முடையதாகவே இருக்க வேண்டும். 

பெற்றோர்களும் தாங்கள் பெருமைப்பட வேண்டும் எனத் தங்களுக்குக் கைகூடாத கனவுகளைத் தங்கள் குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. விருப்பப்படாதபோது, விதைகூட முளைக்க மறுக்கிறது.

மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது,

1. படிப்பின் தன்மை. 2. அளிக்கப்படும் நிறுவனங்கள் 3. ஆகும் செலவு 4. பணி வாய்ப்பு 5. படித்தபின் செய்ய வேண்டியவை 6. கிடைக்கவிருக்கும் உதவித்தொகை போன்ற சகல விஷயங்களையும் நுட்பமாக ஆராய வேண்டும். அனைத்து வகையிலும் திருப்தியளிக்கின்ற படிப்பையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இசையைப் பற்றிய எந்தப் பிடிப்பும், பரிச்சயமும் இல்லாதவர்கள் இசையைப் படிப்பாகத் தேர்ந்தெடுத்தால், பக்கத்து வீட்டுக்காரர்களே பரிதாபத்திற்குரியவர்கள். அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டியவர், சங்கீத நிகழ்ச்சி நடத்தினால், பார்வை யாளர்கள் எப்படி பரவசப்பட முடியும்?

இன்னொரு முக்கியச் செய்தியும் உண்டு.

சில படிப்புகளில் உச்சத்திற்கே சென்றால் தான் பிரகாசிக்க முடியும். ஆய்வு, கண்டுபிடிப்புத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பு என்று ஆழமான வாசிப்பைச் செய்தால் மட்டுமே முன்னணி வகிக்க முடியும்.

குடும்பச் சூழ்நிலையை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு, நிறைய செலவு செய்து குடும்பத்தை வறுமைக்குட்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை. 

அடுத்தவர்களைத் துன்புறுத்தாமலும், குடும்பத்தினரை வற்புறுத்தாமலும் தொடரு கின்ற முயற்சியே நல்ல கல்வி. அடிப்படைக் கல்வியைப் படித்தபின்பு, பணியாற்றிக் கொண்டே மேல்படிப்பு படிக்கின்றவர்களே சிறந்த மனிதர்கள். பெற்றோர்கள், தாங்கள் வளர்ந்த பிறகும் தங்களை கங்காருக் குட்டி களைப்போலத் தூக்கித் திரிய வேண்டும் என எதிர்பார்ப்பது மிகப்பெரிய ஊதாரித்தனம்.

சரித்திரம் படித்தாலும் சரி; கணிதம் படித்தாலும் சரி- அதில் சுடர்விட சுலபமான வழிகள் ஏதும் இல்லை. நிறைய தொடர் புடைய புத்தகங்களையும், அறிவியல் இதழ் களையும் ஊன்றிப் படித்தல் அவசியம். மேம் போக்காகப் படிப்பவர்கள், வீண் ஜம்பத்திற் காகத் தங்கள் கழுத்துகளில் பட்டங்களைத் தொங்கவிட்டுக் கொள்ளலாம். அவையும் ஆட்டுத் தாடியைப்போல அலங்காரப் பொருளாகவே இருக்கும். நுணுக்கமாக எந்தப் படிப்பு படித்தாலும், பணி கிடைத்துவிடும். 

இன்று பல பள்ளிகளில் நன்றாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இன்னும் சில நாட்களில் தமிழுக்கே தகராறு ஏற்படும்.

தம் வீட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களைப் பழுதுபார்க்க வல்லுநர் கிடைக்காமல் எத்தனைபேர் அவதிப்படுகிறார்கள்! விரும்பிய படி  மரச்சாமான்களைத் தயாரித்துத் தர தச்சரில்லாமல் எவ்வளவு சிரமப்படுகிறோம்?

எளிதில் கணினியைப் பொருத்துபவர் கிடைத்து விடுகிறார். ஆனால், சுவையாகச் சமையல் செய்யும் நபர் கிடைக்காமல் பல விடுதிகள் நொந்துபோய் இருக்கின்றன.

உடலுழைப்பு உன்னதம் பெறும் நாட்கள் கூடிய விரைவில் வரவிருக்கின்றன. அப்போது "உழைப்புக்கான கௌரவம்' கிடைக்கப் போகிறது.

"நோக்கம்' பற்றிய வாழ்வுக்கும் "இலக்கு' நோக்கிய வாழ்வுக்கும் வேறுபாடு உண்டு. இலக்கு என்பது மேம்போக்கானது;

நோக்கம் என்பது மையம் சார்ந்தது. இலக்கு என்பது தற்காலிகமானது; நோக்கம் என்பது தொலைநோக்கு  கொண்டது. இலக்கு எப்போதும் மற்றவர்களுக்காக; நோக்கம் என்பது நமக்காக. விண்வெளியில் கால் பதிப்பது இலக்காக இருந்தது; நோக்கமாக இல்லை. அது போட்டியின் அடிப்படையில் அமைந்திருந்த தால்தான், அமெரிக்கா நிலவையடைந்ததும், அதற்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றது.

மாணவர்கள் சிலர் ஆரம்பக் கல்வி கற்கும்போது "என்ன செய்யப் போகிறாய்?' எனக் கேட்டால்  "மருத்துவம் படிப்பேன் - மருத்துவராவேன்' என்பார்கள்.

பிறகு +2 முடித்தபிறகும் "மருத்துவராவேன்' என்பார்கள். மருத்துவப் படிப்பு முடிக்கும் போது "என்ன செய்யப்போகிறாய்?' எனக் கேட்டால் "அதுதான் தெரியவில்லை' என குழப்பத்திலிருப்பார்கள். மருத்துவம் படிப்பது இலக்காக (Goal Oriented)  இல்லாததால்தான் இந்தத் தடுமாற்றம். நோக்கம் குறித்ததாக (Course Oriented) இருந்திருந்தால் இந்தக் குழப்பம் இல்லை. "கிராமத்திலிருக்கும் ஏழை மக்களுக்குப் பணியாற்றுவேன்; அவர்தம் பிணியகற்றுவேன்' எனும் நோக்கத்தைச் செதுக்கினால், இந்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது.

மேல்படிப்பை நோக்கத்துடன் தேர்ந் தெடுத்தால், ஆழமாக அணுகினால், தீவிரமாக உழைத்தால், இனிமையுடன் நுகர்ந்தால், ஆர்வத்துடன் முயன்றால் முத்திரை பதிக்கலாம்; முழுமையையும் எய்தலாம்; முகவரியை எழுதலாம்.

No comments: